வலது காலை முன் வைத்து செல்வது ஏன் ?

மனிதனின் உடல் வலம், இடம் என்று இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. 
வலது பக்கத்தில் அமைந்துள்ள கண், காது, மூக்கு, புஜம், கை, துடை, கால் ஆகிய உறுப்புகளுக்கு உடலில் இடப் பக்கத்தில் அமைந்துள்ள உறுப்புகளைக் காட்டிலும் சற்று பலமும், வலிமையும், புண்ணியமும் அதிகமாக இருக்கும் என்கிறது வேதம். 
இதை இன்றைய விஞ்ஞானமும் உறுதிப்படுத்துகிறது.
அதாவது, நம் உடலைச் சுற்றிலும் இரு வேறு காந்த வளையங்கள் உள்ளன. 

அவற்றில் முதலாவது, கால் பகுதியிலிருந்து தலைப்பகுதிக்கும், தலைப் பகுதியிலிருந்து கால் பகுதிக்கும் வலமாகச் சுற்றுகிறது. 

இரண்டாவது காந்த வளையம் உடலின் இடது பாகத்திலிருந்து உடலில் முன் பகுதி வழியாக, வலது பக்கத்துக்கும், வலப்பகுதியிலிருந்து பின்பகுதி வழியாக இடது பக்கத்துக்கும் வலமாகச் சுற்றுகிறது. 

ஆகவே, காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும்போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன. 

எதிராக அசையும்போது சுருள் தொந்துபோய் உடல் இயந்திரத்தின் செயல்திறன் தளர்வடையச் செய்கிறது. 

ஆகவே, உடலின் இடப் பகுதியைக் காட்டிலும் வலப்பகுதிக்கு செயல்திறன் அதிகம் என்கிறது நவீன மின் இயல்.

இதை ஒட்டியே நமது மகரிஷிகளும் எந்த நல்ல செயலைச் செய்யும்போதும், வலது பகுதியிலுள்ள வலக்கை போன்றவற்றால் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள், புத்தம் புதிதாக ஒரு வீடு கட்டி, அந்த வீட்டுக்கு கிரகப்பிரவேசம்(புதுமனைப் புகுவிழா) நடத்தும் போது, அந்த வீட்டுக்குத் தலைவியான குடும்பப் பெண் வீட்டுக்குள் (வாசல் நிலையைத் தாண்டி அமைந்துள்ள பகுதியில்) நுழையும்போது, தனது வலது காலை வைத்து நுழைய வேண்டும். 

இதனால் வீட்டிலுள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
இவ்வாறே, திருமணம் முடிந்து முதல் முதலாக புகுந்த(கணவன்)வீட்டுக்குள் நுழையும் மணப் பெண்ணும், நுழையும்போது முதலில் தனது வலது காலை வீட்டுக்குள் வைத்து நுழைய வேண்டும். 

இதனால் அந்த வீட்டில் அந்தப்பெண்ணின் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமையும்.

நரம்பு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து விடுபட எந்த விதமான தெய்வ வழிபாடு மற்றும் பரிகாரங்கள் மேற்கொள்ள வேண்டும்?
நரம்புக்கு அதிபதி சூரியன். 

சூரியன் பலமிழந்து துலா ராசியில் சஞ்சரிக்கும் மாதமான ஐப்பசி மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நரம்பு சம்பந்தமான ஒற்றைத் தலைவலி போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புண்டு. 

இப்படிப்பட்ட நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு கண்ணுக்குத் தெரியும் கடவுளான சூரியனை வழிபட வேண்டும்.

அதாவது, ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் அதிகாலை நேரத்தில், கிழக்கு திசையை நோக்கி, தரையில் படுத்து எழுந்திருந்து, தரைப்பகுதியில் நமது உடல் உறுப்புகள் அனைத்தும் படுமாறு பன்னிரண்டு முறை நமஸ்காரம் செய்து வரலாம். 

இதற்கு மந்திரமோ ஆசாரம் போன்ற எந்த ஒரு கட்டுப்பாடோ தேவையில்லை.

தினசரி முடியாவிட்டாலும் ஞாயிற்றுக் கிழமையன்றாவது காலை ஆறு மணிக்கு இவ்வாறு 12 முறை சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் நோய் அண்டாது. குறிப்பாக, நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் தோன்றாது.
இவ்வாறு நமஸ்காரம் செய்ய முடியாதவர்கள், தான் தரையில் அமர்ந்து கொண்டு, தனக்காக மற்றவர்களை விட்டு சூரியனை நோக்கி (சூரிய நமஸ்கார மந்திரங்கள் சொல்லி) நமஸ்கரிக்கச் சொல்லலாம்.
அத்துடன் சூரிய சம்பந்தமான ஆதித்ய ஹ்ருதயம், கோளாறு பதிகம் போன்ற தோத்திரங்களை பாராயணம் செய்யலாம். உபதேசம் ஆனவர்கள் முறையாக சந்தியாவந்தனம் செய்து காயத்ரீ மந்திரத்தை ஜபிக்கலாம். 

சூரியன் அருளால் நரம்பு சம்பந்தமான நோய்கள் உட்பட அனைத்து நோய்களும் விலகி ஆரோக்கியம் கிட்டும்.

திருமணத் தடைக்கு என்ன பரிகாரம் செய்யலாம்?
திருமணம் என்பது மனிதனின் வாழ்க்கையில் நடைபெறும் முக்கியமான நிகழ்வு. இதற்கு மனித முயற்சியைவிட தெய்வ அருளே அதிகமாகத் தேவை. தனது சக்திக்குத் தக்கவாறு இஷ்ட தெய்வங்களையும் குல தெய்வத்தையும் வழிபட்டுக் கொண்டு வந்தால், தக்க காலத்தில் திருமணம் கைகூடும்.
பல காலமாக திருமணம் கைகூடாதவர்கள் அதற்காக சில புண்ணியச் செயல்களைச் செய்யலாம். 

குறிப்பாக, திருமணம் ஆகியும் தன்னந்தனியே பிரிந்து வாழும் கணவனையும் மனைவியையும் ஒன்று சேர்த்து வைக்கலாம். 

இதனால், திருமண வாழ்க்கை விரைவாக இன்பமாக அமையும்.

‘புண்ணியமான செயல்களிலேயே அதிகமான புண்ணியம் தரும் செயல் ஓர் ஆணையும் பெண்ணையும் ஒன்றாக இணைத்து வைக்கும் செயல்தான்’ என்கிறது சாஸ்திரம். 

ஆகவே, பணம், பதவி, புகழ் போன்றவற்றுக்கு ஆசைப்படாமல், தன்னலமின்றி ஓர் ஆணுக்கோ பெண்ணுக்கோ இரு வீட்டார் தொடர்பு சம்மதத்தோடு, திருமணத்தை ஏற்பாடு செய்து முடித்து வைப்பதால் தங்கள் குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கு காலத்தில் திருமணம் நடைபெறும்.

 இதில் சந்தேகமில்லை.

மேலும், திருமணம் ஆன பின்னர், ஏதோ சிற்சில மனக்குறைகளால் தனிமையில் பிரிந்து வசிக்கும் கணவனையும் மனைவியையும் தொடர்பு கொண்டு இருவரிடமும் பேசிப்பழகி அவர்களுக்குள் ஒரே கருத்துக்களை உருவாக்கி, பிரிந்த தம்பதிகளை ஒன்றாக இணைத்து வைப்பவர்களின் குடும்பத்தில் திருமணத்தடையே ஏற்படாது. 

ஆனால், இந்தச் செயலை தன்னலமின்றி, எதையும் எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும்.

ஆகவே, சுயநலமின்றி ஓர் ஆணையும் பெண்ணையும் ஒன்றாக இணைத்து வைப்பதே சிறந்த புண்ணியம் என்பதும், திருமணம் செய்து கொண்டு ஒற்றுமையுடன் வாழும், கணவனும் மனைவியும் பிரிந்து வாழக் காரணமாக இருப்பதே மிகப்பெரும் பாவச் செயல் என்பதும் இதன் மூலம் புலப்படுகிறது.